மக்களவையில் சரித்திர நிகழ்வு.. முதன்முறையாக அரங்கேறும் சபாநாயகர் தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்தார் K.சுரேஷ்
மக்களவை சபாநாயகரை தேர்வு செய்ய முதன்முறையாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார் கோடிகுன்னில் சுரேஷ்.
மக்களவை சபாநாயகராக பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் பதவி வகித்து வந்தார் ஓம்பிர்லா. தற்போது ஆட்சி முடிந்து மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், சபாநாயகரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இதுதொடர்பாக பாஜக-வை சேர்ந்த ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜூஜூ ஆகியோர் இந்தியா கூட்டணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையின் போது ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்ய இந்தியா கூட்டணியினர் சம்மதித்தாலும், துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு கொடுக்க கோரி வலியுறுத்தினர். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி சம்மதிக்காததால், வேறுவழியின்றி சபாநாயகரை தேர்தல் வைத்து தேர்வு செய்யும் சூழல் உருவாகி உள்ளது. இந்திய வரலாற்றிலேயே மக்களவை சபாநாயகரை தேர்வு செய்ய தேர்தல் நடப்பது இதுவே முதன்முறை ஆகும்.
இதையும் படியுங்கள்... வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள சபாநாயகர் தேர்தல்... ஓம் பிர்லாவை எதிர்த்து போட்டி - யார் இந்த கே.சுரேஷ்?
இந்த தேர்தல் ஜூன் 26-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கே.சுரேஷும் களமிறங்க உள்ளனர். அந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக ஓம் பிர்லா முதலில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், தற்போது அவரை எதிர்த்து போட்டியிடும் கே.சுரேஷும் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓம் பிர்லா தான் வெற்றிபெறுவார். ஏனெனில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க 293 எம்.பி.க்கள் உள்ளனர். மறுபுறம் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க 232 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். இருந்தாலும் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள கே.சுரேஷ், இது தன்னுடைய முடிவல்ல, கட்சியின் முடிவு. துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்படுவது வழக்கம், ஆனால் அதை விட்டுத்தர பாஜக முன்வரவில்லை. நாங்கள் காலை 11.50 வரை காத்திருந்தோம் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் நாமினேஷன் தாக்கல் செய்தோம் என கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... சபாநாயகர் தேர்தல்.. என்.டி.ஏவின் ஓம் பிர்லாவை எதிர்த்து கே. சுரேஷை களமிறக்கிய இந்தியா கூட்டணி..