கோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிராபிக் ராமசாமியின் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகின. இதையடுத்து ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 5 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், மனோஜ், தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி மீது பகிரங்கமாக புகார் தெரிவித்தனர். கோடநாடு கொலை- கொள்ளை தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் மறுப்பு தெரிவித்தார். 

இதற்கிடையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி கோடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை கோடநாடு வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது, கோடநாட்டில் கொள்ளை மற்றும் இரட்டைக் கொலை நடந்த வழக்கை சாதாரண குற்ற வழக்காக கருதக் கூடாது, இதை அரசியல் நோக்கம் கொண்டதாக கருதலாம். ஜெயலலிதாவின் மரணம் சந்தேகத்துக்குரியதாக கருதப்படும் நிலையில் இவ்வழக்கை மிக தீவிரத்தன்மை கொண்டதாக பார்க்க வேண்டியுள்ளது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதிகள் டிராபிக் ராமசாமி மனுவில் போதிய விவரங்கள் இல்லை. ஆகையால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.