பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது! ஒரே வாரத்தில் 4வது சம்பவம்... பீதியில் பொதுமக்கள்!!
பாலம் இடிந்து விழுந்தபோது பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் இல்லாத காரணத்தால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடுப்புகள் வைத்து இடிந்த பாலத்தின் அருகே செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலம் ஒன்று வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. கடந்த ஒரு வாரத்திற்குள் பீகார் மாநிலத்தில் நான்காவது பாலம் இடிந்திருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பஹதுர்கஞ்ச் தொகுதியில் 70 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலம் கொண்ட பாலத்தின் தூண்களில் ஒன்று இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக திடீரென நீர்மட்டம் உயர்ந்த நிலையில் பாலத்தின் தூண் சரிந்ததாகத் தெரியவந்துள்ளது.
2011ஆம் ஆண்டு கங்கை நதியை மகாநந்தா ஆற்றுடன் இணைக்கும் சிறிய துணை நதியான மடியா மீது இந்தப் பாலம் கட்டப்பட்டது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் தூண்களில் ஒன்று தாக்குபிடிக்க முடியாமல் சரிந்துவிட்டது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் துஷார் சிங்லா கூறுகிறார்.
பாலம் இடிந்து விழுந்தபோது பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் இல்லாத காரணத்தால், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். பாலத்தின் இரு முனைகளிலும் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் இடிந்த பாலத்தின் அருகே செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பீகாரின் சிவான் மற்றும் அராரியா மாவட்டங்களில் கடந்த வாரம் இதேபோன்ற மூன்று பாலங்கள் இடிந்து விழுந்தன. சமீப ஆண்டுககளாகவே, பீகார் மாநிலத்தில் ஏராளமான பாலங்கள் தரமற்ற கட்டுமானம் காரணமாக இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
இதனால், பீகாரில் மேற்கொள்ளப்படும் பொது கட்டுப்பானப் பணிகளின் தரம் குறித்த கேள்விகள் வலுவாக எழுப்பப்படுகின்றன. இந்தச் சம்பவங்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், உள்ளூர் மக்களிடையே கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.