இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் உப்பர் சுபான்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. ஏற்கனவே இந்தியா - சீனா இடையே நல்ல உறவு இல்லாத சூழலில் அவர்களை சீன ராணுவத்தினர் கடத்தியதாக செய்திகள் வெளியானதால் பதற்றம் ஏற்பட்டது. 

ஆனால் அந்த 5 இளைஞர்களையும் சீன ராணுவத்தினர் கடத்தவில்லை என்றும் வழிதவறி சீன பகுதிக்குள் சென்றிருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செப்டம்பர் 8ம் தேதி இட்ட டுவிட்டர் பதிவில், ”இந்திய ராணுவம் அனுப்பிய ஹாட்லைன் செய்திக்கு சீன ராணுவம் பதிலளித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல்போன இளைஞர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அதுகுறித்த அடுத்தகட்ட அப்டேட்டை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். வழிதவறி சீன பகுதிக்குள் சென்ற அருணாச்சல பிரதேச இளைஞர்களை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க சீன ராணுவம் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து கிரண் ரிஜிஜு பதிவிட்ட டுவீட்டில், அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க சீன ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. செப்டம்பர் 12(சனிக்கிழமை) எந்த நேரத்திலும் அந்த இளைஞர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படலாம் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.