முக்கியப்புள்ளி வெளியே இருக்கிறார்: கெஜ்ரிவாலை மறைமுகமாக சாடிய அனுராக் தாக்கூர்!
டெல்லி மதுபான முறைகேடு தொடர்பாக முக்கியப்புள்ளி வெளியே இருக்கிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். அதன் முடிவில், சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சஞ்சய் சிங் கைதுக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ள கெஜ்ரிவால், மோடியின் முகத்தில் பதற்றம் தெரிவதாகவும், தேர்தல் வரை பாஜக இன்னும் ஏராளமானோரை கைது செய்யும் என்றும் அவர் சாடியுள்ளார்.
இந்த நிலையில், டெல்லி மதுபான முறைகேடு தொடர்பாக முக்கியப்புள்ளி வெளியே இருக்கிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ராய்பூர் விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மதுபான கொள்கை முறைகேட்டில், டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மற்றும் பலர் சிறையில் உள்ளனர். முக்கியப் புள்ளி இன்னும் வெளியே இருக்கிறார்; அவர் விரைவில் வெளியே வருவார்.” என அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக சாடினார்.
ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற முழக்கத்தை எழுப்பி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது ஊழலில் திளைத்துள்ளனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை அனுராக் தாக்கூர் விமர்சித்தார்.
இந்த 4 நாடுகளும் உங்களுக்கு பணம் கொடுக்கும்: உடனே டிக்கெட் புக் பண்ணுங்க!
சஞ்சய் சிங் கைதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாக்கூர், “அரவிந்த் கெஜ்ரிவாலைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள், பதற்றம் அவரது முகத்தில் தெரிகிறது. ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற முழக்கத்தை எழுப்பியவர்கள் அவர்கள். ஆனால், இப்போது ஊழலில் மூழ்கியிருக்கிறார்கள்.” என்றார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வட்ன்ஹ இரண்டு மாதங்களுக்குள், ஊழல் காரணமாக மாநில சுகாதார அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது என்றும் அவர் சாடினார். “தனக்கு அவமானத்தை ஏற்படுத்திய மதுபான ஊழல் பற்றி கெஜ்ரிவாலிடம் பதில் இல்லை. இதுவரை டெல்லி துணை முதல்வர் உள்பட பலர் சிறைக்கு சென்றுள்ளனர். ஆனால் முக்கியப்புள்ளி இன்னும் வெளியே இருக்கிறார். விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அந்த முக்கியப்புள்ளியும் சிக்குவார்.” என்று அனுராக் தாக்கூர் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் நற்சான்று வழங்கியவர்கள் எல்லோரும் ஓராண்டாக சிறையில் இருக்கிறார்கள் என்ற அனுராக் தாக்கூர், தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு மற்றும் சத்தீஸ்கர் அரசையும் கடுமையாக சாடினார்.