Kill the husband - Detained - woman arrested

காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றுவிட்டு, பின்பு காதலன் முகத்தில் ஆசிட் வீசி ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், நாகர்கூணல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி. இவருக்கு சுவாதி என்ற மனைவி உள்ளார். சுவாதிக்கும், ராஜேஷ் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. கணவர் சுதாகரைக் கொல்ல சுவாதியும், ராஜேசும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம், 26 ஆம் தேதி சுதாகர் ரெட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது, சுவாதியும், அவரது காதலன் ராஜேசும் சேர்ந்து, கம்பியால் தலையில் அடித்துக் கொன்றுள்ளனர். கொலை செய்யப்பட்ட சுதாகர் ரெட்டி உடலை, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதைத்தனர்.

கணவர் இடத்தில் ராஜேஷை கொண்டுவர சுவாதி திட்டமிட்டுள்ளார். இதற்காக மீண்டும் ஒரு சதிவலையைப் பின்னியுள்ளார். அதாவது காதலன் ராஜேஷ் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளார். எதற்காக என்றால், கணவர் முகத்தில் தீக்காயம் பட்டுவிட்டதாக அவரது குடும்பத்தினரை நம்ப வைப்பதற்குத்தானாம்.

அவரின் திட்டப்படியே, இறந்துபோன சுதாகர் ரெட்டியின் சகோதரர்கள், பிளாஸ்டிக் சிகிச்சைக்காக சுமார் 5 லட்சம் ரூபாய் வரையிலும் செலவு செய்திருக்கிறார்கள். போட்ட திட்டம் நல்லபடியாக செயல்பட்டு வருவதை நினைத்து சந்தோஷமடைந்துள்ளார் சுவாதி. ஆனால், அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை...

இதற்கு காரணம், சுதாகர் ரெட்டியின் தாய்தான். இது என் மகன் அல்ல என்றும், குடும்ப விஷயங்களைப் பற்றி பேச மறுக்கிறான் என்றும், எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து கொலை செய்யப்பட்ட சுதாகர் ரெட்டியின் தாய், போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார், சுவாதியிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், சுவாதி நடந்த உண்மைகளை போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சுவாதி கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஷ், சிகிச்சை பெற்று வருவதால் அவரை கைது செய்ய போலீசார் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் வனப்பகுதியில் புதைக்கப்பட்ட சுதாகர் ரெட்டியின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொலைக்காட்சி, திரைப்படங்களை மிஞ்சும் வகையில் நடந்தேறியுள்ள இந்த கொலை, ஆள்மாறாட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.