கேரளாவில் நேற்று நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் பெண் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து ஐஏஎஸ் தேர்வு எழுதிய சம்பவம் அனைவரையும் வியப்பு அடைய செய்துள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயத்தின் எருமேலி பகுதியை சேர்ந்தவர் லதிஷா அன்சாரி (24). இவர் பிறக்கும் போதே மிகவும் அபூர்வமான எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டார். மேலும், நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், சுவாசிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால்,  பெரும்பாலும் ஆக்சிஜன் சிலிண்டருடன் தான் வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இவர், எம்.காம். படித்துள்ளார். ,வருக்கு ஷெஹின் என்பவருடன் திருமணம் ஆனது. இருவரும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துள்ளனர். ஷெஹினுக்கு இது மூன்றாவது தேர்வு. லதீஷாவுக்கு இது முதல்தேர்வு.

 

தனது உடலில் இவ்வளவு நோய்கள் இருந்த போதிலும், படிப்பில் மட்டும் மனம் தளராமல் இருந்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு லதிஷா தயாராகி வந்தார். இந்நிலையில் கோட்டயம் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக லதீஷாவின் தந்தை மனு அளித்திருந்தார். இதில் லதீஷா ஐஏஎஸ் தேர்வு எழுத உள்ளதாகவும், ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படுவதால் அதனை வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

 இதனையடுத்து, திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை எழுத வந்த இவருக்கு, சிறிய ரக ஆக்சிஜன் சிலிண்டரை மாவட்ட ஆட்சியர் இலவசமாக வழங்கினார். இதன் உதவியுடன் சுவாசித்த லதிஷா, ஐஏஎஸ் தேர்வை எழுதினார். அவருடைய மன உறுதியை பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டி வருகின்றனர்.