நாட்டையே உலுக்கிய கொலை வழக்கு: ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொன்ற பெண்ணுக்கு தூக்குத் தண்டனை!
கேரளாவில் ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொன்ற பெண்ணுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
ஒருவரையொருவர் காதலித்தனர்
கன்னியாகுமரி மாவட்டத்தை ஓட்டிய கேரள பகுதியான பாறசாலையில் வசித்து வந்தவர் ஷரோன் ராஜ். இவரும், கன்னியாகுமரி நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த 2022ம் ஆண்டு ஷரோன் ராஜ் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவருக்கு பாறசாலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஷரோன் ராஜின் திடீர் மரணம் அவரது பெற்றோர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்தபோது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
ஜூஸில் விஷம் கலந்து கொலை
அதாவது உயிருக்கு உயிராக நேசித்த காதலியான கிரீஷ்மாவே ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது. இந்த கொலைக்கான காரணங்கள் அதிர வைக்கின்றன. கிரீஷ்மாவின் காதல் வீட்டுக்கு தெரியவந்ததால் அவர்கள் ராணுவ வீரர் ஒருவருக்கு அவரை திருமணம் செய்து முடிவு செய்துள்ளனர். ராணுவ வீரர் என்பதால் வசதியான வாழ்க்கை வாழ நினைத்த கிரீஷ்மா அவரை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டார்.
இதனால் ஷரோன் ராஜ் தனது திருமணத்துக்கு இடையூராக இருப்பார் என நினைத்தும், ''உங்களுடைய முதல் கணவர் இறந்து விடுவார்'' என்று ஜோதிடர் ஒருவர் கூறியதாலும் ஷரோன் ராஜை தீர்த்துக் கொண்ட கிரீஷ்மாவும், அவரது மாமா நிர்மலா குமரன் நாயர் முடிவு செய்தனர். இதனால் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷரோன் ராஜை தன்னுடய வீட்டுக்கு வரவழைத்த கிரீஷ்மா, ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து அவரை கொடூரமாக கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
குற்றவாளிகள் என தீர்ப்பு
இதனைத் தொடர்ந்து கிரீஷ்மா, அவரது தாய், அவரது மாமா நிர்மலா குமரன் நாயர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கேரளாவின் நெய்யாற்றின்கரையில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிரீஷ்மா மற்றும் அவரது மாமா நிர்மலா குமரன் நாயர் குற்றவாளிகள் என அறிவித்தது.
உயிருக்கு உயிராக நேசித்த காதலனை கொன்ற கிரீஷ்மா முதல் குற்றவாளியாகவும், விஷம் வாங்கி கொடுத்து கொலைக்கு உதவியாக இருந்த நிர்மலா குமரன் நாயர் 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். அதே வேளையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கிரீஷ்மாவின் தாயை நீதிமன்றம் விடுவித்தது. இவர்கள் 2 பேருக்குமான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்து இருந்தது.
மரண தண்டனை விதிப்பு
அதன்படி இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காதலனை கொடூரமாக கொலை செய்த கிரீஷ்மாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த அவாது மாமா நிர்மலா குமரன் நாயருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதிபதிகள் தீர்ப்பை வாசித்ததும் கொடூர மனம் கொண்ட கிரீஷ்மா கண்ணீர் விட்டு அழுதார்.
இதேபோல் தீர்ப்பைக் கேட்க ஷரோன் ராஜின் தந்தை, தாய் உள்ளிட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் தங்களுடைய மகனை அழித்த கொடூரக்காரிக்கு தக்க தண்டனை வழங்கிய நீதிபதிகளுக்கு அவர்கள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு தடயங்களை கண்டறிந்து குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.