கேரளாவில் சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

கேரளாவில் கடந்தாண்டு நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியது. இந்த காய்ச்சலால் இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். கேரள சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கை காரணமாக இந்த காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  

இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர் காய்ச்சல் காரணமாக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. எனவே, கூடுதல் பரிசோதனைக்காக ஆலப்புழாவில் உள்ள நுண்ணுயிரி பரிசோதனை கூடத்துக்கு அவரது ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று ரத்த பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே முதல்வர் நிபா சைரஸை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். மருத்துவர்களும், மருந்துகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சுகாதாரத்துறை தரப்பில் நிபா வைரஸ் அணில் மற்றும் வவ்வால்கள் மூலம் பரவும் என்றும், எனவே அணில்கள், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.