கேரளாவில் பருவமழை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 97-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 

பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருபுறம் மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரளாவில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் 5 குழுவினர் திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளனர்.