கேரளாவில் அரசு பள்ளிகளில் ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் பாலின சமத்துவத்தை வலுயுறுத்தும் நோக்கில் ஒரே மாதிரியான சீருடை முறை வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது.
கேரளாவின் அரசு பள்ளிகளில் மாணவ - மாணவியருக்கு பாலின பேதமின்றி ஒரே மாதிரியான சீருடை அணியும் நடைமுறை கொண்டுவரப்பட்டநிலையில் இதனை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
பெரம்பாவூர் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர்கள் அனைவருமே, மேல் சட்டையும் முக்கால் பேண்ட்டும் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஸ்கர்ட் - பினோஃபார்ம் - சுடிதார் என பெண் குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆடை அறிவுறுத்தல்கள் பள்ளி தரப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. பேண்ட் - ஷர்ட் என மாணவர்களின் ஆடையை போலவே மாணவிகளின் ஆடையும் அமைந்திருப்பதன் மூலம், மாணவிகள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி, சுதந்திரமாக நடக்கவும் ஓடி ஆடி விளையாடவும் முடியும் என்று பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து பள்ளிநிர்வாகம், குறிப்பாக ஸ்க்ர்ட் அணிகையில் பெண் குழந்தைகள் கூடுதல் சிரமத்துக்கும், சிக்கலுக்கும் உள்ளாகின்றனர். அவர்கள் சற்றே சுதந்திரமின்றி, ஆடை விலகிவிடுமோ என்ற ஐயத்துடனும் எண்ணத்துடனும் கவனத்துடனேயே இருப்பதை அறியமுடிகிறது என்று கூறியுள்ளது. ஆகவே அந்த நடைமுறையை மாற்ற முடிவு செய்து, குழந்தைகளின் பெற்றோருடன் கலந்துரையாடினோம் என்று கூறியுள்ளது.
பெரும்பாலான் பெற்றோர், எங்களுக்கு ஆதரவு தெரிவித்து, இந்த முடிவை வரவேற்றனர் எனவும் தற்போது வெளியுலகத்துக்கு தெரியவந்து, பேசுபொருளாக மாறியிருப்பது, மகிழ்ச்சியாக உள்ளதாகவும் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் பாலின வகுப்பெடுக்கும் பள்ளிகள் அனைத்தும் இதுகுறித்து யோசிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இயங்கி வரும் மற்றொரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பாலின பேதமின்றி மாணவ, மாணவியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை அணியும் வழக்கத்தை கடைபிடிக்கும் புதிய நடைமுறை அமல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை எதிர்த்து அங்கு இயங்கி வரும் இஸ்லாமிய அமைப்புகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டன.
பெரம்பாவூர் அரசு தொடக்கப் பள்ளியில் பாலின பேதமின்றி ஒரே மாதிரியான சீருடை அணியும் வழக்கத்தை அடுத்து பலுசேரி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. பள்ளியின் உத்தரவை ஏற்று சுமார் 200- க்கும் மேற்பட்ட மாணவிகள் சட்டை மற்றும் பேண்ட் சீருடை அணிந்து பள்ளிக்கு வந்துள்ளனர்.

இதனை கண்டித்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் மேற்கொண்டுள்ளன. மேலும் அவர்கள், பெண்களின் ஆடை சுதந்திரத்தில் தலையிடும் நடவடிக்கை இது என தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பள்ளியின் முதல்வர், மாணவர்கள் யாரையும் இந்த சீருடை தான் அணிய வேண்டும் என பள்ளி தரப்பில் கட்டாயப்படுத்தவில்லை என விளக்கம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த பாலின சமத்துவ சீருடை கலாசாரத்தால் பள்ளி குழந்தைகள் அனைவரும், மனதளவில் பேதங்களை தவிர்த்து பழகுவதாகவும் மாணவியர் எவ்வித முன்யோசனையுமின்றி சுதந்திரமாக நடக்கவும், ஓடி ஆடி விளையாடவும் முடிகிறதாகவும் பள்ளிதரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஒரே மாதிரியான சீருடை அணியும் நடவடிக்கைக்கு மாணவர்கள் மற்றும் அரசு தரப்பில் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.
