வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ள நிலையில், கட்டுமானம் உள்பட வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதியம் 3 மணி நேரம் ஓய்வு கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கொளுத்தும் வெயில்
'கடவுளின் தேசம்'என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் வழக்கத்துக்கு மாறாக வெயில் இப்போது இருந்தே கொளுத்த தொடங்கியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 30 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் கொளுத்தி வருக்றது. கேரளாவில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, மாநில தொழிலாளர் நலத்துறை ஆணையர் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றியமைத்துள்ளார்.
அதாவது மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தொழிலாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 8 மணி நேரமாக வேலை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 11 முதல் மே 10 வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். வெயிலின் தாக்கத்தால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் துறை மற்றும் சாலைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மதியம் கட்டாயம் ஓய்வு கொடுக்க வேண்டும என உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்
மேலும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் நேரடியாக அலைவதைத் தவிர்க்கவும்.
* அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும். தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிப்பதைத் தொடரவும்.
* நீர்ச்சத்தை இழக்கச் செய்யும் மது, காபி, தேநீர், கார்பனேட்டட் பானங்கள் போன்றவற்றை பகல் நேரத்தில் தவிர்க்கவும்.
* தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியவும்.
* வெளியே செல்லும்போது காலணிகள் அணியவும். குடை அல்லது தொப்பி பயன்படுத்துவது நல்லது.
* பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடவும். மோர் போன்றவற்றை அருந்துவதை ஊக்குவிக்கவும்.
காட்டுத்தீ அபாயம்
* சந்தைகள், கட்டிடங்கள், குப்பை மேடுகள் போன்ற இடங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தீ பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுபோன்ற இடங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் மற்றும் அலுவலகங்கள் நடத்துபவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* அதிக வெப்பம் காரணமாக காட்டுத் தீ பரவும் அபாயம் உள்ளது. வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காட்டுத் தீ ஏற்படுவதற்கான சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும். வனத்துறையின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.
* கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். வகுப்பறைகளில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு நேரங்களில் தேர்வு அறைகளிலும் தண்ணீர் வசதி செய்ய வேண்டும்.
* மாணவர்களின் விஷயத்தில் பள்ளி நிர்வாகமும் பெற்றோரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெயிலில் அதிக நேரம் நிற்கும் கூட்டங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் பள்ளிகள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாணவர்கள் நேரடியாக வெயிலில் அலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் நலன் முக்கியம்
* அங்கன்வாடி குழந்தைகள் வெயிலில் அலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தந்த பஞ்சாயத்து நிர்வாகமும் அங்கன்வாடி ஊழியர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* படுக்கையில் இருக்கும் நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடியாக வெயிலில் அலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு வெயில் அடிக்கும் அபாயம் அதிகம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* இரு சக்கர வாகனங்களில் உணவு விநியோகம் செய்பவர்கள் மதிய நேரத்தில் (காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) பாதுகாப்பாக இருப்பதை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஆடைகளை அணிய அறிவுறுத்த வேண்டும்.
* ஊடகவியலாளர்கள் மற்றும் காவல்துறையினர் இந்த நேரத்தில் (காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) குடைகளைப் பயன்படுத்த வேண்டும். நேரடியாக வெயிலில் அலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குடிநீர் வழங்கி நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க வேண்டும்.
தண்ணீரை வீணாக்கக் கூடாது
* பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள் போன்றவற்றை நடத்தும்போது பங்கேற்பாளர்களுக்குத் தேவையான குடிநீர், நிழல் போன்ற வசதிகளை ஏற்பாடு செய்பவர்கள் உறுதி செய்ய வேண்டும். முடிந்தவரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டங்களைத் தவிர்க்கவும்.
* கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள், கடினமான வேலைகளில் ஈடுபடுபவர்கள் போன்றோர் வேலை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். வேலையின்போது போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* மதிய வெயிலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதையும், செல்லப் பிராணிகளை வெயிலில் கட்டிப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். விலங்குகள் மற்றும் பறவைகளுக்குத் தண்ணீர் வசதி செய்ய வேண்டும்.
* தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். மழை பெய்யும்போது அதிகபட்சமாக தண்ணீரைச் சேமிக்க வேண்டும். நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க எப்போதும் ஒரு சிறிய பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
* வானிலை ஆய்வு மையம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்புகளைக் கவனிக்க வேண்டும். அவற்றைப் பின்பற்ற வேண்டும்.
