திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இருப்புத்திரை படம் பாணியில் மொபைலில் இருந்து மர்ம நபர்கள் நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை நூதன முறையில் எடுத்துக்கொள்ளும் நிலை அரங்கேறியுள்ளது. மொபைல் போனுக்கு சர்வதேச எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என கேரள போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மிஸ்டு கால் வந்த எண்ணை தொடர்பு கொண்டால் ஏராளமான பணத்தை இழக்க நேரிடும் என்றும்  எச்சரித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.இந்த மோசடி சம்பவங்கள் பல்வேறு நாடுகளில் அரங்கேறியுள்ளது. வான்கிரி என்றால் ஜப்பான் மொழியில் ஒரு ரிங் உடனே கட் என்று  பொருளாகும். சமீபகாலமாக கேரளாவில் உள்ள மொபைல் போன்களுக்கு + 591 என்று தொடங்கும் எண்ணில் இருந்து அழைப்புகள் வருகின்றன. இந்த அழைப்புகள் பொலிவியா நாட்டில் இருந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. ஒரு ரிங் வந்த பிறகு அழைப்பு கட் ஆகி விடும். தெரியாமல் அந்த எண்ணை தொடர்பு கொண்டால், ஒரு நிமிடத்திற்கு 200 ரூபாய் வீதம் இழக்க நேரிடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சர்வதேச எண்ணில் இருந்து மிஸ்டு கால் வந்தால் உஷராக இருக்க வேண்டும் என கேரள போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.