Asianet News TamilAsianet News Tamil

களமசேரி குண்டு வெடிப்பு: வகுப்புவாதத்தை தூண்டியதாக 54 வழக்குகள் பதிவு!

களமசேரி குண்டுவெடிப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் வகுப்புவாதத்தை தூண்டும் செய்திகளை பரப்பியதாக 54 வழக்குகளை கேரளா போலீசார் பதிவு செய்துள்ளனர்

Kerala police have registered 54 cases for spreading communally instigative Kalamassery blasts smp
Author
First Published Nov 5, 2023, 5:07 PM IST | Last Updated Nov 5, 2023, 5:07 PM IST

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதியன்று யெகோவாவின் சாட்சிகள் வழிபாட்டு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில், ஒருவர் உயிரிழந்தார். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில, அது IED வகை டிபன் பாக்ஸ் குண்டு என தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரிக்க 20 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அமைத்துள்ளார். அதேசமயம், குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று பேஸ்புக்கில் சுயமாக வெளியிடப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மார்ட்டின் என்பவரை கடந்த 30 ஆம் தேதி கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சமூக ஊடக தளங்களில் வகுப்புவாத தூண்டும் செய்திகளை பரப்புவோரை கண்காணிக்க முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மாநில காவல்துறை தலைவர் ஆகியோர் சிறப்பு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், களமசேரி குண்டுவெடிப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் வகுப்புவாதத்தை தூண்டும் செய்திகளை பரப்பியதாக 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரளா போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேரள காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத வெறுப்பை வளர்க்கும் வகையிலும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பியதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 26 வழக்குகளும், எர்ணாகுளம் நகரில் 10 வழக்குகளும், எர்ணாகுளம் ஊரகம் மற்றும் திருவனந்தபுரம் நகரில் தலா ஐந்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருச்சூர் நகரம் மற்றும் கோட்டயத்தில் தலா இரண்டு வழக்குகளும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, பாலக்காடு மற்றும் கோழிக்கோடு கிராமப்புறங்களில் தலா ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகாரிகளுக்கு இணையான விடுப்பு: ஆயுதப்படை பெண் வீராங்கனைகளுக்கு ஹேப்பி நியூஸ்!

விசாரணையின் போது, பல போலி கணக்குகளை  தொடங்கி, பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் மத வெறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் செய்திகளை பரப்புவதும், பகிர்வதும் கண்டறியப்பட்டுள்ளது என்று போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அவர்கள் பயன்படுத்திய ஐபி முகவரியை கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதுபோன்ற செய்திகளைப் பரப்புபவர்களைக் கண்டறிந்து, மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சைபர் செல் பிரிவில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios