கேரளாவில் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 19 மாநிலங்களில், 578 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 141 பேரும், அதைத் தொடர்ந்து டெல்லியில் 142 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 41 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், கேரளாவில் 57 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை உள்ளிடவற்றை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் அனைத்து மாநில செயலாளார்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பகுதியில் நிலவும் சூழல் பொருத்து நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. தேவை ஏற்படுமாயின், கூட்டம் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு கூட பிறபிக்கலாம் என்றும் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தலாம் என்றும் சொல்லபட்டுள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுபாடுகளை விதிப்பது குறித்து அந்தெந்த மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதற்கும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, கடற்கரைகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் கூட்டங்களை தடைவிதிக்கப்பட்டு, காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

மேலும் பார்கள், ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் தகுதியான மக்களில் 98% பேர் தடுப்பூசியின் முதல் டோஸையும், 77 சதவீதம் பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவினால் 1,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,24,929 ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 46,822 பேர் உயிரிழந்துள்ளனர்.