மனித குலத்திற்கே பெரும் சவாலாக திகழும் கொரோனா வைரஸ், இந்தியாவில் தினம் தினம் அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகலாக சுயநலமின்றி குடும்பங்களை பிரிந்து மக்களுக்காக சேவையாற்றிவருகின்றனர்.

கொரோனா இந்தியாவில் ஆரம்பமான சமயத்தில் கேரளாவில்தான் வேகமாக அதிகரித்தது. மின்னல் வேகத்தில் உயர்ந்த கொரோனா பாதிப்பு, கேரளாவில் கடந்த ஒரு வாரமாக வெகுவாக குறைந்து பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ளது. முதல் மாநிலமாக இரட்டை சதமடித்த கேரளாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கைன் 357 தான். ஆனால் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி எல்லாம் தாறுமாறாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்த, மனிதகுலத்தால் எல்லா காலத்திலும் போற்றக்கூடிய பணியை மருத்துவர்களும் செவிலியர்களும் செய்துவருகின்றனர். அப்படியான ஒரு செவிலியரை இழந்துவிட்டது கேரளா.

கேரளாவில் திரிசூர் மாவட்டத்தில் உள்ள குன்னம்குளம் என்ற ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் மார்ச் மாத மத்தியில் பயிற்சி செவிலியராக சேர்ந்த ஆசிஃப் என்ற ஆண் செவிலியர், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை கவனித்து அவர்களுக்காக சேவை செய்துள்ளார். கடந்த மாதம் அவர் பார்த்த வேலைக்கான ஊதியத்தை பெற்ற ஆசிஃப், அந்த மகிழ்ச்சியில் தனது தாயை பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் அரிசி ஏற்றிச்சென்ற லாரியில் மோதி விபத்து ஏற்பட்டதில் ஆசிஃப் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.