கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவோனம் பம்பர் லாட்டரி விற்பனை நடந்தது. இந்த லாட்டரியின் மொத்த பரிசு ரூ.12 கோடி. கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் 6 பேர் ேசர்ந்து தலா ரூ.50 கொடுத்து 300 ரூபாய்க்கு ஒரு லாட்டரி சீட்டு வாங்கினர்.

இந்த லாட்டரி சீட்டுக்கு குலுக்கல் இன்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் டிக்கெட் எண் டிஎம் 160869 என்ற எண்ணுக்கு முதல் பரிசு விழுந்தது. இந்த லாட்டரி எண்ணுக்குரிய சீட்டை கொல்லம் நகரில் உள்ள நகைக்கடையில் பணியாற்றும் ரோனி, சுபின் தாமஸ், ராம்ஜின், ராஜீவன், ரதீஷ், விவேக் ஆகியோர் வாங்கி இருந்தனர். இவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது அறிந்ததும் அவர்களால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.

இதுகுறித்து விவேக் கூறுகையில் “ நாங்கள் இதற்கு முன் இதுபோல் எல்லோரும் சேர்ந்து பணம் போட்டு லாட்டரி வாங்குவோம். இந்த முறையும் விளையாட்டுக்குத்தான் வாங்கினோம். ஆனால், கோடிக்கணக்கில் பரிசு கிடைத்ததை நம்ப முடியவில்லை. இந்த பணத்த வைத்து என்ன செய்யலாம் என யோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்

இந்த 6 பேரும் ஆழப்புழாவில் உள்ள ஸ்ரீமுருகா லாட்டரி ஏஜென்சிஸில் சிவன்குட்டி என்பவரிடத்தில் இந்த லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்கள். இந்த பரிசுத் தொகை ரூ.12 கோடியில் ரூ.6.18 கோடி மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். இதுதவிர 2-வது பரிசு, மூன்றாவது பரிசும் இந்தத் தொகையில் இருந்து பிரிக்கப்படும்.