தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது. தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் வயநாட்டின் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் 40 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கேரளா முழுவதும் தொடர் மழையால், மின் வினியோகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தடைபட்டு, மக்கள் இயல்வு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.