கேரளாவில் கடந்த ஜூனில் பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது.  இதனால் அங்கு பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர்.  பலர் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.  2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  காணாமல் போன 58 பேரில் 50 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள்.  இந்த பகுதியில் 24 பேர் பலியாகி உள்ளனர்.  இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும்.

இதனிடையே கேரளாவின் மலப்புரம் பகுதியில் உள்ள கொட்டக்குன்னு என்ற இடத்தில் சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.  இந்த பகுதி கடந்த வாரம் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவை சந்தித்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன் கொட்டக்குன்னு மலை பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினை அடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.  இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சென்று அங்கு சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பல மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின் சரத்தின் மனைவி கீது  மற்றும் அந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை துருவ் ஆகிய இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

நிலச்சரிவு ஏற்பட்டவுடன் கடும் வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்டு உள்ளனர்.  இதில் தனது குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து வெள்ளம் இழுத்து சென்று விடாமல் இருப்பதற்காக அவனது கையை கீது இறுக பிடித்து கொண்டு இருந்துள்ளார்.  ஆனால் வெள்ளத்தில் சிக்கி சேறு மற்றும் சகதிகளுக்குள் தாய் மற்றும் குழந்தை இறந்து கிடந்த காட்சி நெஞ்சை பிழியும் வகையில் இருந்தது.

அவர்கள் இருவரின் உடல்களையும் கண்ட அந்த பகுதி மக்கள் மற்றும் மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் கண்கலங்கியபடி நின்றனர்.  இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவுமின்றி சரத் தப்பி விட்டார்.  அவரது தாயார் சரோஜினியின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது.