கேரள மாநிலத்தில்  இருவழி பாதையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று திடீரென விதிமுறை கோட்டை மீறி தவறான பாதையில் வந்தது. இதனைத் தொடர்ந்து அந்தச் சாலை வழியே சரியான வழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற  பெண் ஒருவர் பாதை மாறி வந்த பேருந்திற்கு வழிவிடாமல் தில்லாக நின்றார்.

இதனையடுத்து பேருந்தின் ஓட்டுநர் தன் தவறை உணர்ந்து சரியான பாதைக்கு மீண்டும் பேருந்தை திருப்பிச் சென்றார். இந்தச் சம்பவத்தை அவ்வழியே சென்ற  மலையாள நடிகர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து முகநூலில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணின் தைரியத்தையும் இணையவாசிகள் பாராட்டினர்.

இந்நிலையில் இந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் பெயர் சூர்யா மானீஷ் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் நான் பேருந்து ஓட்டுநருக்கு எதிராக சவால்விட்டபடி ஒன்றும் சாலையில் நிற்கவில்லை. எனக்கு அந்த நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆகவே அப்படியே நின்றேன்.

இந்தச் சம்பவத்திற்கு முன்பாக என் முன்னால் ஒரு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து திடீரென இடது புறம் சென்று நின்றது. இதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளி பேருந்து திரும்பிய பிறகு நான் சென்று கொண்டிருந்த சாலைப் பகுதியில் எதிரே அரசுப் பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திக் கொண்டு வந்தது.

இந்தப் பேருந்து வந்த வேகத்தைப் பார்த்தவுடன் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆகவே நான் பயந்து எதுவும் செய்யாமல் நின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள அரசுப் பேருந்து ஓட்டுநர், 'நான் இயக்கிய பேருந்து பெரும்பாவூர் பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு முன்பு இந்தச் சம்பவம் நடைபெற்றது. நான் சென்று கொண்டிருந்த பாதையில் பள்ளிப் பேருந்து ஒன்று குழந்தைகளை இறக்கி கொண்டிருந்ததால் நான் காலியாக இருந்த வலது புறத்தில் பேருந்தை இயக்கினேன்.

அப்போது தான் இந்தப் பகுதியில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்றதை பார்த்தேன். அவர் தொடர்ந்து வாகனத்தை நகர்த்தாமல் என்னைப் பார்த்து கொண்டிருந்தார். நான் உடனே மீண்டும் சாலையின் இடது பக்கத்திற்கு சென்று பேருந்து நிலையத்திற்குள் சென்றேன். இதில் தவறு என்னுடையது என்பது தெரிந்ததும் பேருந்தை திருப்பி சென்றுவிட்டேன் என தெரிவித்தார்.