கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவு பெய்துவரும் கன மழையால் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத  வகையில் மிக கனத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.கடந்த 2 வாரங்களாக இந்த மழை இடைவிடாமல் பெய்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. இதனால் அங்குள்ள 33 அணைகள் திறக்கப்பட்டு உள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழை காரணமாக ஆறுகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளம் போன்ற காரணங்களால் கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை கேரளாவில் மிதமிஞ்சிய மழை பெய்யும் என்றும் நாளை காலை 8.30 மணி முதல் 19-ந் தேதி காலை 8.30 மணி வரை பலத்த காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் கேரள மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். 

100 ஆண்டுகளில் இல்லாத இந்த கனமழையால்  பாய்ந்தோடும் வெள்ளத்தில் சிக்கி 500-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். மீட்பு நடவடிக்கையை எதிர்பார்த்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 223139 பேர் 1500 முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

2857 வீடுகள் சேதமடைந்து உள்ளது.3393 ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்தன. இன்று  பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கேரள செல்கிறார். அங்கு வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசும் போது பிரதமர் மோடி  இன்று காலை என்னுடன் பேசினார்.

அப்போது இன்று வெள்ளிக்கிழமை  "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வருவதாக கூறி உள்ளார். "நாங்கள் வெள்ள நிவாரணப் பணிகள் பற்றி  விவாதித்தோம், மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தோம் ," எனக் கூறினார்