பெற்றோரால் பிரித்து வைக்கப்பட்ட லெஸ்பியன் பெண்கள் இருவரை கேரள உயர்நீதிமன்றம் சேர்த்து வைத்துள்ளது. கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் ஸ்ரீஜா. 40 வயதான இவர் இளம் வயது முதலே லெஸ்பியனாக இருந்துள்ளார். இந்த நிலையில் லெஸ்பியன் பெண்களுக்கான இணையதளம் ஒன்றின் முலமாக ஸ்ரீஜாவுக்கு 24 வயதே ஆன திருவனந்தபுரத்தை சேர்ந்த அருணா அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். அவ்வப்போது தனிமையில் சந்தித்து இருவரும் உறவு கொண்டுள்ளனர். 

ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று அருணாவிடம் ’ஸ்ரீஜா கூறியுள்ளார். அருணாவுக்கும் ஸ்ரீஜா மிகவும் பிடித்துப்போனதால் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். மிகுந்த துணிச்சலை வரவழைத்துக் கொண்ட அருணா தனது முடிவை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருணாவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். ஆனால் அங்கிருந்த தப்பிய அருணா, கொல்லத்தில் உள்ள ஸ்ரீஜா வீட்டில் குடியேறினார்.

 மேலும் தான் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்று காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். போலீசார் சமரசம் செய்து அனுப்பிய நிலையில் அருணாவை அவரது பெற்றோர் கார் ஒன்றில் வந்து கடத்திச் சென்றனர். அருணாவின் பெற்றோர் நடத்திய தாக்குதலில் ’ஸ்ரீஜா காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருணாவை அவரது பெற்றோர் திருவனந்தபுரம் அழைத்துச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் தான் ஓரினச்சேர்க்கை தவறில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

உடனடியாக துள்ளி எழுந்த ஸ்ரீஜா கொச்சி உயர்நீதிமன்றத்தில் அருணாவை ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் அருணாசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது தான் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும், ஸ்ரீஜாவுடன் செல்ல விரும்புவதாகவும் கூறினார் அருணா. உடனடியாக போலீசார் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். உடனடியாக அருணாவுடன் ஸ்ரீஜா கொல்லத்தில் உள்ள தனது வீட்டில் குடியேறினார். லெஸ்பியன் ஜோடியை பெற்றோர் பிரித்த நிலையில் உயர்நீதிமன்றம் சேர்த்து வைத்துள்ளது.