கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. மே மாதம் இறுதியில் தொடங்கிய இந்த மழை இப்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. மழையால் அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கேரளாவே வெள்ளத்தில் மிதக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இது போன்ற மழை பெய்ந்துள்ளது.

முக்கிய 4 அணைகளும் திறந்து விடப்பட்டதால் பம்பை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலத்தின் மேலே தண்ணீர் ஓடுவதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மண் சரிவு அபாயமும் இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மழையால் இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, ஆலப்புழா உள்ளிட்ட 10 மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் சேதத்தை சந்தித்துள்ளது. கேரளாவில் உள்ள 24 அணைகளும் நிரம்பி விட்டன. இதுவரை 22 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை மழைக்கு 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பம்பை ஆற்றில் அளவுக்கு மீறிய வெள்ளம் காரணமாகவும் பெரும் சேதத்தை கேரள மக்கள் சந்தித்து வருகிறார்கள். மேலும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கும் இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு, பத்தனம்திட்டா பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சபரி மலையில் 15-ம் தேதியன்று சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலை கோவில் நடை அன்று திறக்கப்படவுள்ளது. பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிகைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்குள் வெள்ளம் வடிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.