கேரளாவில் படிப்படியாக மழையின் தாக்கம் குறையும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேவேலையில் கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கேரளாவில் கடந்த 2 வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாநில முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் கேரள மக்கள் பீதி அடைந்தனர். பலர் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 

நிலச்சரிவு மற்றும்  வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் நிலச்சரிவில் சிக்கி மாயமாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் மழையின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில் கேரளாவில் 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் மழையின் தாக்கம் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது. 

வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. அதன் பிறகு கேரளாவில் மீண்டும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. கேரளா, கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு அரபிக்கடல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.