கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட்: சுகாதாரத்துறை அமைச்சர் உயர்மட்ட ஆலோசனை!
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இயற்கைக்கு மாறான இந்த மரணங்களுக்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவரது உறவினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, கோழிக்கோடு மாவட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் நிபா வைரஸ் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
முன்னதாக, காய்ச்சல் காரணமாக உயிரிழந்த இருவரின் உறவினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருந்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் தகனம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
“மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறை கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது. தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இறந்த இருவரும் தொடர்பில் இருந்தவர்கள்.” என்று அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
முதல் மரணம் ஆகஸ்ட் 30ஆம் தேதியும், இரண்டாவது மரணம் செப்டம்பர் 11ஆம் தேதியும் (நேற்று) நிகழ்ந்தது. “மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார அமைப்புகளும் உஷார் நிலையில் உள்ளன. இறந்தவர்களின் நெருங்கிய தொடர்புகளை தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் முடிவுகள் வந்துவிடும், அதன் பின்னரே நிபா வைரஸ் தொற்று தொடர்பாக உறுதி செய்ய முடியும்” என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 2018 ஆம் ஆண்டில் நிபா வைரஸ் பரவியது. அதில் சுமார் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் 2021 ஆம் ஆண்டில், கோழிக்கோட்டில் நிபா தொற்று கண்டறியப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, நிபா வைரஸ் பழம்தின்னி வவ்வால்களில் இருந்து பரவுகிறது. இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானது. சுவாச பிரச்சினைகளுடன், காய்ச்சல், தசை வலி, தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவை இதன் அறிகுறிகளால அறியப்படுகிறது.