Asianet News TamilAsianet News Tamil

முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை மேலும் குறைக்க வேண்டும்….. உச்சநீதிமன்றத்தில் அடம்பிடிக்கும் கேரள அரசு…!

முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து அடம்பிடிக்கிறது.

Kerala govt files a new affidavit in supreme court on mullai periyar dam issue
Author
Delhi, First Published Nov 9, 2021, 1:48 PM IST

முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து அடம்பிடிக்கிறது.

மழைக்காலம் தொடங்கும்போதெல்லாம் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பூதகரமாக மாறுவது வாடிக்கையாகி வருகிறது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக மழை பெய்துவருவதால், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று வழக்கம் போல் அம்மாநில மக்களும், மலையாள நடிகர்களும் பழைய பல்லவியை பாடத் தொடங்கிவிட்டனர். இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காமல் முல்லைப் பெரியாறு அணை முழு கொள்ளளவை எட்டும் முன்னரே அணையில் இருந்து உபரிநீரை கேரள அரசு தன்னிச்சையாக வெளியேற்றியது.

Mullai periyar dam issue

கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு விவசாயிகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அணை விவகாரத்தில் கேரளத்தில் ஆளும் கம்யூனீஸ்ட் அரசு மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இல்லை. கேரளத்தில் கனமழை, நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரி சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஜோய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே அணை உறுதியாக இருப்பதாகக் கூறிக்கொண்டே உபரிநீரை திறந்தது கேரள அரசு. மேலும், தனிநபர் தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கேரளா அரசு சார்பில் இன்று உச்சநீதியமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை சேமிக்கலாம் என்ற மத்திய மேற்பார்வை குழு அறிக்கையை ஏற்க முடியாது. நிலநடுக்கம் மற்றும் பூகம்ப பாதிப்பு ஏற்படும் பகுதியில் அணை அமைந்துள்ளதால் அதிக அளவில் நீர் சேமிப்பத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது." எனக் தெரிவித்துள்ளது.

Mullai periyar dam issue

மேலும், "மழைக்காலங்களில் அணையின் நீர்மட்டத்தை 136 அடிவரை குறைக்க வேண்டும். அணைப் பகுதியில் உள்ள பத்தினம்திட்டா, இடுக்கி மற்றும் கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஏற்கனவே பலர் உயிரிழந்துள்ளனர். வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நவம்பர் 10ஆம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு புதிய விதியை உருவாக்க தமிழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகம் 2735 க்யூசெக் நீரை வெளியேற்ற வேண்டும் ஆனால் 27 அக்டோபர் காலை வரை 2200 க்யூசெக் மட்டுமே வெளியேற்றி வருகிறது. உடனடியாக தமிழ்நாடு அரசு முழு அளவையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேரளா அரசு தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஒவ்வொரு மாதமும் முல்லைபெரியாறு அணையில் எவ்வளவு நீர் மட்டம் இருக்கலாம் என நிர்ணயிக்கும் விதியை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கபட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

Mullai periyar dam issue

முல்லைப் பெரியாறு அணையில் நவம்பர் 10 ஆம் தேதி வரை 139 அடி வரை நீரை சேமித்து வைக்கலாம் என அக்டோபர் 28 ஆம் தேதி நீதிமன்ற இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இதனிடையே அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து கேரளா அரசு மாறுபட்ட கருத்துகளை கூறிவருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்ட அமைச்சர் துரைமுருகன், கேரளா அரசை இதுவரை கண்டிக்கவில்லை. மாறாக உச்சநீதிமன்ற விதிகளின்படியே கேரளா அரசு உபரிநீரை திறந்ததாக பினராயி அரசுக்கு ஆதரவாகவே துரைமுருகன் பேசி வருகிறார். இந்தநிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மேலும் குறைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமானப்பத்திரம் தாக்கல் செய்திருப்பது தென் தமிழக விவசாயிகளை கொதிப்படையச் செய்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios