கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கேரளாவில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக உச்சத்தில் உள்ளது. கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் 2வது அலை தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் தனது டுவிட்டர் பதிவில்;- எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் தொற்று எவ்வாறு பரவியது என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதனால் கடந்த ஒருவாரமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் அல்லது தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று  பதிவிட்டுள்ளார்.