கடந்த சில மாதங்களுக்கு முன்பு தந்தையின் ஈமச்சடங்கிற்கு அரசின் உதவி பணம் கேட்ட மகனிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர். இதனால் அவர், லஞ்சம் வேண்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கேரளாவில் பெண் ஒருவர், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக உண்டியலை வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்.
கேரள மாநிலம், சிறையின்கீழு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (34). இவருக்கு சொந்தமான நிலம் தொர்பான ஆவணங்களை அங்குள்ள அதிகாரிகள் திரித்து மோசடி செய்துள்ளதாக கிருஷ்ணவேணி குற்றம் சாட்டியுள்ளார்.
இது சம்பந்தமாக, அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பிரச்சனையைத் தீர்க்க பணம் கொடுத்தால், பிரச்சனையை தீர்த்து விடுவதாக கூறியுள்ளனர். அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறிய கிருஷ்ணவேனியிடம், அப்படியானால் உன் கற்பை கொடு என்று அதிகாரிகள் மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள இரண்டு அதிகாரிகளில் ஒருவர் என்னிடம் முத்தம் கேட்டார் என்றும் இன்னொருவர் என்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று கேட்டதாக கிருஷ்ணவேணி கூறுகிறார்.
இந்த நிலையில், கேரள தலைமைச் செயலகப் பகுதியில் கிருஷ்ணவேணி, தனக்கு நீதி வேண்டும் என்ற பேனருடன், ஒரு உண்டியலையும் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார். பேனரை படித்த பலர் அவருக்கு பணம் கொடுத்து செல்கின்றனர்.
கிருஷ்ணவேனியின் இந்த குற்றச்சாட்டு குறித்து, டி.எஸ்.பி. அஜி என்பவர் மறுத்துள்ளார். இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய புகார் என்றும், இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றம் கூறினார். இது குறித்து முறையாக விசாரணை நடந்து வருவதாகவும், முடிந்துபோன விவகாரத்தில், மேலும் சிலரை சேர்க்க வேண்டும் என்பதற்காக கிருஷ்ணவேணி இவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
