பாலியல் பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரி, உறவினர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக இயேசு சபை மிஷனரிகள் குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பாதிரியார்கள் 5 பேர் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பலாத்கார புகார் கொடுத்தார். 

பேராயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாஸ்திரிகள், கடந்த 5 நாட்களாக போராடி வருகின்றனர். பேராயர் மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவிடம் பலாத்காரம் குறித்து புகார் அளித்தார். அதில், 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பேராயர் முலக்கல், தன்னை பலதடவை பலாத்காரம் செய்ததாகவும், இது குறித்த புகாரை வெளியே சொல்வதற்கு பயமும், அவமானமும் இருந்ததால் கூறவில்லை. 

இது குறித்து நான் தற்போது புகார் கூறியுள்ளேன். ஆனாலும், பேராயர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்று அதில் கேள்வி எழுப்பி இருந்தார். தாங்கள் தலையிட்டு பேராயர் முலக்கலை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கன்னியாஸ்திரி அந்த கடிதத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி மீது இயேசு சபையின் மிஷனரிகள் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளனர். 

கன்னியாஸ்திரி தனது உறவினர்களில் ஒருவருடன் கள்ள உறவு வைத்திருந்தார் என்றும் அது குறித்து பேராயர் பிராங்கோ மீது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார புகார் சுமத்தி உள்ளதாக இயேசு சபை மிஷனரிகள் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தையும், சபையையும் அழிக்கும் திட்டமாக கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் இயேசு சபை குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது. பாலியல் புகார் அளித்த கன்னியாஸ்திரி மீது, இயேசு சபை  மிஷனரிகள் குற்றச்சாட்டு கூறியுள்ளது, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.