கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனின் உயிருக்கு குறி வைத்து ‘காவிப் படை’யினர் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக, மாநிலங்கள் அவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் கே.கே.ராகேஷ் குற்றம் சாட்டினார்.

நேற்று மாநிலங்கள் அவை கூட்டத்தின்போது, இது குறித்து அவர் கூறியதாவது-

‘‘காவிப்படை (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் ஒருவர் கேரள முதல்வர் விஜயனின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

மற்றொரு சம்பவத்தில் ‘காவிப்படை’யினரின் தூண்டுதலால் போபாலில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டாம் என விஜயனுக்கு தெரிவிக்கப்பட்டது.

மங்களூரில் விஜயன் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு எதிராக வேலை நிறுத்தம் (ஹர்த்தால்) அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி சுமுகமாக நடந்தது.

கேரள முதல்வரின் மற்ற நிகழ்ச்சிகளுக்கு எதிராகவும் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் ஒருவரை குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேண்டாம் எனக் கூறுவதற்கு அவர்கள் யார்?.

முதல்-அமைச்சர் விஜயன் கேரள மாநிலத்தில் மதச்சார்பற்ற தன்மைக்கு ஆதரவாக இருப்பதன் காரணமாகவே அவரை குறி வைத்து இதுபோன்ற பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’.

இவ்வாறு அவர் கூறினார்.