மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்ற முதல் மாநில அரசு கேரளா என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மனுக்கள் விசாரணைக்கு வர உள்ளது. பாஜக ஆளாத பல்வேறு மாநில அரசுகள் குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று அறிவித்துள்ள நிலையில் இப்போது கேரள அரசு சட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளது.


பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மதத்தினருக்கு (முஸ்லிம் அல்லோதோர்) குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களின்போது பெரிய அளவில் வன்முறைகள் வெடித்தன. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இருந்தபோதிலும், இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்த சட்டம் கடந்த 10-ம் தேதி முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று பாஜக அல்லாத மாநிலங்களில் உள்ள அரசுகள் தெரிவித்துள்ளன. 


இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. கேரள அரசு தாக்கல் செய்த மனுவில், “ குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு சமத்துவ உரிைம, மதச்சார்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2015-ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினருக்கான உத்தரவில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு  எதிராகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2015-ம் ஆண்டுக்கு முன்பிருந்து இந்தியாவில் தங்கி இருக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களை தங்க வைக்கும் உத்தரவையும் எதிர்த்துள்ளது.குடியுரிமைத் திருத்தச்சட்டம் அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு 14, 21, 25 ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளது “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது