Kerala Afan mass killing case: திருவனந்தபுரத்தில் 23 வயதான அஃபான் தனது காதலி, சகோதரர், பாட்டி மற்றும் இரண்டு உறவினர்கள் உட்பட ஐந்து பேரைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். பிறகு அவரே திருவனந்தபுரம் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் தொடர் கொலை சம்பவம் நடந்துள்ளது. பெருமலா பகுதியைச் சேர்ந்த அஃபான் என்ற 23 வயது இளைஞர் மூன்று வெவ்வேறு இடங்களில் குத்தியால் குத்தி பலரைக் கொலை செய்துள்ளார். இந்த தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் அவரது காதலி, அவரது சொந்த சகோதரர் மற்றும் அவரது பாட்டி ஆகியோர் அடங்குவர். அவரது தாயார் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வெஞ்சாரமூட்டில் தொடங்கியது, அங்கு அஃபான் தனது காதலியையும் சகோதரனையும் கொலை செய்தார். சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். வீட்டில் இருந்த மற்றொரு நபரும் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரண்டாவதாக, பாங்கோடில் உள்ள அஃபானின் பாட்டி வீட்டில் வைத்து பாட்டி சல்மா பீவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். மூன்றாவது தாக்குதல் எஸ்.என்.புரத்தில் நடந்தது. அங்கு அஃபான் மேலும் இரண்டு நபர்களைக் கொன்றார். அஃபானின் உறவினர்கள் லத்தீப் மற்றும் அவரது மனைவி ஷாஹிதா ஆகியோரைப் படுகொலை செய்தார். படுகாயமடைந்த அவரது தாயார் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர் கொலைகளைத் தொடர்ந்து, அஃபான் வெஞ்சாரமூடு காவல் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்து, ஆறு கொலைகளைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். இதன் மூலம் வெஞ்சாரமூட்டில் மட்டுமல்ல, பாங்கோடு மற்றும் எஸ்.என். புரத்திலும் கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் தெரியவந்தது. சரணடைந்த பிறகு, அவர் விஷம் குடித்ததாகக் கூறி, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

போலீசார் தற்போது அஃபானின் அளித்த வாக்குமூலங்களை சரிபார்க்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை நடந்தது ஏன்?

காவல்துறை அறிக்கைகளின்படி, கொலைகளுக்குப் பின்னால் நிதி நெருக்கடியே காரணம் என்று அஃபான் கூறியுள்ளார். வெளிநாட்டில் அவரது தொழில் தோல்வியடைந்ததால், அவர் கடுமையான கடனில் சிக்கினார், இது அவரை குற்றங்களைச் செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. சரணடைந்த பிறகு, அவர் விஷம் குடித்ததாகக் கூறி, சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது தாயார் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டனர். மூன்று வீடுகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன, அதிகாலையில் இருந்து கொலைகள் தொடர்ச்சியாக நடந்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அஃபான் தனது தந்தையுடன் வெளிநாட்டில் வசித்து வந்தார், ஆனால் சமீபத்தில் விசிட்டிங் விசாவில் இந்தியா திரும்பி இருக்கிறார். அவரது தாயார் ஷமீனா புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

வெளிநாட்டில் அஃபான் செயதுவந்த உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் தோல்வியடைந்ததால் குடும்பம் நிதி நெருக்கடியைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அஃபான் பலரிடம் இருந்து பெரிய தொகைகளைக் கடன் வாங்கியுள்ளார்.

அஃபான் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், அதிக கடன் சுமையால் வாழ்க்கை தாங்க முடியாத சுமையாக மாறிவிட்டது எனக் கூறியுள்ளார். இதனால், தனது குடும்பத்தையே கொன்றுவிட்டு தானும் தற்கொல்ல செய்துகொள்ள முடிவு செய்ததாகவும், அதுதான் தனக்கு இருக்கும் ஒரே வழி என்று நம்பியதாகவும் தெரிவித்துள்ளார். தனது காதலியை கொலை செய்வதற்கு முன்பு, அவளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். தான் தற்கொலை செய்துகொண்டால் அவள் தனியாக விடப்படுவாள் என்ற பயத்தில் அவரையும் கொலை செய்ததாக அஃபான் தெரிவித்திருக்கிறார்.