Kejriwal is corrupt must resign or I will drag him to Tihar jail Kapil Mishra
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கறுப்பு பணத்தை மாற்றி பண மோசடியில் ஈடுபட்டார் என்று கபில் மிஸ்ரா புதிய குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
டெல்லி மாநில அரசில் நீர்வளத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் கபில் மிஸ்ரா. சக மந்திரி சத்தியேந்திர ஜெயினிடம் இருந்து முதல்–மந்திரி கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக அவர் ஏற்கெனவே பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதையடுத்து அவர் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக கபில் மிஸ்ரா தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று 5-–வது நாளாக அவருடைய போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் கபில்மிஸ்ரா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கறுப்பு பணத்தை மாற்றியதற்கு ஆதாரம் உள்ளது. அவர் பண மோசடியில் ஈடுபட்டார். மொகாலா கிளினிக் மோசடியை வெளிப்படுத்துவேன். இது பற்றி விசாரணை நடத்த வேண்டும். 45 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி இணையதளத்தில் வெறும் ரூ.19 கோடி மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்திற்கு தவறான வங்கி விபரத்தை தெரிவித்துள்ளது. நன்கொடை விபரத்தையும் ஆம் ஆத்மி மறைத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள் வேறு பணமோசடியிலும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

திடீரென மயங்கி விழுந்தார்.
மோசடிக்கான ஆதாரங்கள் என்று கூறப்படும் ஆவணங்களை கபில் மிஸ்ரா செய்தியாளர்களிடம் நின்று காட்டி கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கபில் மிஸ்ராவை, அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
