காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள்  2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்று விட்டு நேற்று ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்..

வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வதுதான் வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக அந்த நெடுஞ்சாலையில் மோசமான வானிலை மற்றும் நிர்வாக காரணங்களால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால்தான் துணை ராணுவ வீரர்கள் ஒரே நாளில் 78 வாகனங்களில் மொத்தமாக சென்றனர்.

அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.
அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். 

அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. இதில் 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலங்களவை  உறுப்பினர் ராஜீவ் சந்திரேசேகர், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இக்கட்டான இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் இந்தியர்களாக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக நமது வீரமிகு இதயங்கள் துடிக்க வேண்டியது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக நாம் வேறுபட்டிருந்தாலும், நமது ஒற்றுமை உலகின் மிகப் பெரிய தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பதிலளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், புல்வா மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பாகிஸ்தானின் ஒரு மோசமான நாடகம் என்றும் ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.