ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை அடுத்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும், மாநில அந்தஸ்தை இழந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால், ஜம்மு-காஷ்மீரி பதற்றம் நிலவி வருகிறது.  

இந்நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்கள், டிஜிபிக்கள், பாதுகாப்பு படை மற்றும் காவல்துறை ஆணையர்கள் தயார் நிலையில் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களும் சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் வன்முறை, மதக்கலவரம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உஷார் நிலையை அமல்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

குறிப்பாக காஷ்மீரில் உள்ள வீடுகள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காஷ்மீருக்கு படிக்க வந்திருக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.