Asianet News TamilAsianet News Tamil

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - பள்ளிகளுக்கு விடுமுறை

kashmir border-pakistan-army-attack
Author
First Published Oct 26, 2016, 2:33 AM IST


ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஜம்மு மாவட்டம், ஆர்.எஸ். புரா, ஆர்னியா, சுசேத்கர், கனாசௌக், பார்க்வால் ஆகிய பகுதிகளில் உள்ள எல்லை பாதுகாப்பு படையின் 25 எல்லைச் சாவடிகள் மற்றும் கிராமப் பகுதிகள் மீது பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் இரவு முதல் அத்துமீறி தானியங்கித் துப்பாக்கிகள் மூலம் சுடுவதுடன், சிறிய ரக பீரங்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும், 6 வயது சிறுவனும் உயிரிழந்தனர். மேலும் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில், பாகிஸ்தான் படையை சேர்ந்த 2 பேர் இறந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி, தாக்குதல்களை நடத்தி வருவதால், ரஜோரி பகுதியில் எல்லை பகுதிக்கு நெருங்கிய பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிக்கு அருகில் இருக்கும் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios