காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் வீர மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வதுதான் வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக அந்த நெடுஞ்சாலையில் மோசமான வானிலை மற்றும் நிர்வாக காரணங்களால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால்தான் துணை ராணுவ வீரர்கள் ஒரே நாளில் 78 வாகனங்களில் மொத்தமாக சென்றனர்.

அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.
அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.

தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறிப்போய் விழுந்தனர்.இந்த கொடூர தாக்குதலில் 50 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடம் ரத்தக்களறிகளாலும், வீரர்களின் உடல் உறுப்புகளாலும் போர்க்களம் போல காணப்பட்டது.

படுகாயம் அடைந்த வீரர்கள் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

நாடு முழுவதும் இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில். அந்த தாக்குதலில் தமிழக வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த அனபதி என்பவரது மகன் சுப்ரமணியன் என்பவர் தாக்குதலில் பலியாகி உள்ளார். அவரது இறப்பு செய்தி கேட்டு சுப்ரமணியனின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.