Karthi Chidambarams bank account is Rs 1.16 crore freezing
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த நிதி முறைகேடு விவகாரத்தில், கார்த்தி சிதம்பரத்தின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1 கோடியே 16 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சி.பி.ஐ. விசாரணை
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு விவகாரத்தில் சிக்கிய கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் அவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ‘கண்காணிக்கப்படும் நபர்’ (லுக்அவுட்) நோட்டீசையும் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
ரூ.1.16 கோடி முடக்கம்
இதற்கிடையில், கடந்த முறை லண்டன் சென்றபோது கார்த்தி சிதம்பரம், தனது வெளிநாட்டு வங்கி கணக்குகளை மூடி விட்டதாகவும், அந்த கணக்குகளில் இருந்த பணம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.1 கோடியே 16 லட்சத்தை முடக்கி ைவத்து மத்திய அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிறுவனத்தின் பெயரில்...
அதன்படி, கார்த்தி சிதம்பரத்தின் வங்கி நிரந்தர வைப்புத் தொகையில் இருந்தும், சேமிப்பு கணக்கில் இருந்தும் ரூ.90 லட்சமும், ‘அட்வாண்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் (எ.எஸ்.சி.பி.எல்.) நிறுவனத்தின் நிரந்தர வைப்புத் தொகை கணக்கில் வைக்கப்பட்டு இருந்த ரூ.26 லட்சமும் முடக்கப்பட்டு இருப்பதாக, அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
வேறு ஒருவர் பெயரில் இயங்கி வரும் இந்த நிறுவனம், கார்த்தி சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறி இருக்கிறது. டெல்லி அருகில் உள்ள குர்கானில் இருந்த சொத்து ஒன்றை கார்த்தி விற்று விட்டதாகவும், முடக்க நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக சில வங்கிக் கணக்குகளை மூடிவிட்டதாகவும், மேலும் சில கணக்குகளை மூட முயற்சிப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
