பெண்களுக்கான ‘சக்தி’: அமலுக்கு வந்தது இலவச பேருந்து பயணம்!
கர்நாடக மாநிலத்தில் இலவச பேருந்து பயண திட்டமான சக்தி திட்டம் அமலுக்கு வந்துள்ளது அம்மாநில பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது
கர்நாடக மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு, தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றான செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், அம்மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘சக்தி’ திட்டம் ஜூன் 11ஆம் தேதி (நேற்று) தொடங்கி வைக்கப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில், “க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், க்ருஹ லட்சுமி திட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும், அன்னபாக்யா திட்டத்தில் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும், சக்தி திட்டத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்படும். யுவநிதி திட்டத்தில் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.” ஆகிய ஐந்து வாக்குறுதிகள் மிகவும் முக்கியமானவை.
இதில் முதலாவதாக கர்நாடக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சக்தி திட்டத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் ஐந்து பயணாளிகளுக்கு சக்தி ஸ்மார்ட் கார்டுகளையும் அவர்கள் விநியோகித்தனர்.
திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் சித்தராமையா, பேருந்து நடத்துனர் போன்று, மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் பெங்களூருவில் இருந்து தர்மஸ்தலாவுக்கு சென்ற பேருந்தில் பெண் பயணிகளுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்கினார். இதையடுத்து, மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் பேருந்துகளில் பயணம் செய்து டிக்கெட் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். கேஜிஎஃப் தொகுதி பெண் எம்எல்ஏவான ரூப்கலா ஷஷிதர் என்பவர் இத்திட்டத்தை தொடங்கும் பொருட்டு, கேஎஸ்ஆர்டிசி பேருந்தை சிறிது தூரம் ஓட்டினார்.
இந்த திட்டத்தின் மூலம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுமார் 42 லட்சம் பெண்கள் பயணடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “கர்நாடகாவில் உள்ள அரசுப் பேருந்துகளில் தினமும் சுமார் 40 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். இலவச பயணத் திட்டத்தின் கீழ் இந்த எண்ணிக்கை 10 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,700 கோடி செலவாகும். இந்த திட்டம் அமலுக்கு வந்தவுடன், சிறந்த சேவை வழங்கப்படும்.” என்று கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) நிர்வாக இயக்குனர் அன்புகுமார் உறுதி அளித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, இந்தியாவில், தொழிலாளர்களில் பெண்களின் பங்களிப்பு குறைந்து வருவதாகவும், இலவசப் பேருந்து பயணத் திட்டமானது, பெண்களை அதிகளவில் பணியில் சேர்வதற்கு உதவும் என கூறினார். “இந்தியாவின் முறையான மற்றும் முறைசாரா பணியாளர்களில் 24% மட்டுமே பெண்கள் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். 2014ஆம் ஆண்டு முதல், அவர்களின் பங்கேற்பு சுருங்கி வருகிறது - 30% லிருந்து 24% ஆக குறைந்துள்ளது. சக்தி திட்டம், பெண்களுக்கு அதிகாரமளிக்க உதவும். இந்த திட்டமானது மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்.” என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெண்கள் அதிகாரம் பெறும்போது சமூகத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் படிப்படியாக களையப்படும் எனவும், பெண்கள் பங்களிப்பை அதிகம் கொண்ட நாடுகள் வளர்சியடையும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பணக்காரர்களை மட்டும் கவனித்துக் கொள்ளும் பாஜகவுக்கு எங்களின் கவலை தெரியாது. சாமானிய மக்களின் இன்னல்களை போக்குவதே எங்களது நோக்கம். பதவியேற்ற 20 நாட்களில் முதல் வாக்குறுதி அமலுக்கு வந்து பெண்கள் பயனடையத் தொடங்கியுள்ளனர் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அடுத்த எம்ஜிஆரா விஜய்? திரும்பும் அரசியல் பார்வை!
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொண்டு வந்த திட்டங்களில் முக்கியமானது மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். இந்த திட்டமானது பெண்களின் வளர்ச்சிக்கு வித்திடும் சமூக புரட்சி திட்டம் என பலராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் அம்மாநில அரசால் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தின் மூலம், பெண்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும் என்பதால், கர்நாடக மாநிலத்தில் சக்தி திட்டம் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நகர்ப்புற பயனர்களை விட கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் வயதானவர்கள் அதிகளவில் பயன்பெறக் கூடும் என தெரிகிறது. இத்திட்டத்தின் மூலம், தங்கள் பயணத் தேவைகளுக்காக குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்திருப்பது குறையும். பெண்கள் கவுரவமாக நடத்தப்படுவதற்கும், அதிகாரமளித்தலுக்கும் இந்த திட்டம் பங்களிக்கும். இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கப்படும் தொகையை கூடுதல் வீட்டுச் செலவுகளுக்குப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சக்தி திட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, பெலகாவி மாவட்டம் சங்கொல்லி கிராமத்தில் உள்ள தனது பேரனின் இல்லத் திறப்பு விழாவிற்குச் சென்ற சக்தி திட்ட பயனாளியான மூதாட்டி நிங்கவ்வா சங்கதி என்பவர் பேருந்தை வணங்கி அதில் ஏறினார். சக்தி திட்டத்துக்கு அம்மாநிலத்தில் எந்தளவு வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பெண்கள் இலவச பேருந்து திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்களை அம்மாநில அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு, பயனாளிகள் தங்கள் அரசு வழங்கிய புகைப்பட அடையாளத்தையும் முகவரிச் சான்றினையும் காட்ட வேண்டும். நடத்துனர்கள் அவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்குவார்கள். அதன் பிறகு, பயனாளிகள் சக்தி ஸ்மார்ட் கார்டுகளை அரசாங்கத்தின் சேவா சிந்து இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொண்டு பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்தி திட்டத்தின் கீழ் இலவச பயணத் திட்டத்தின்படி, திருநங்கைகள் பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.