கர்நாடகாவில் யூடியூப் செய்தி சேனல்களைத் தொடங்க உரிமம் கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. மின்னணு ஊடகப் பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் சித்தராமையா இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் யூடியூப் செய்தி சேனல்களைத் தொடங்க இனி உரிமம் கட்டாயமாக்கப்படுமா என கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தொலைக்காட்சிகளுக்கு இருப்பது போலவே, யூடியூப் செய்தி சேனல்களுக்கும் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை அரசு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யூடியூப் சேனல்களுக்கு உரிமம் கட்டாயம்

சமீபத்தில் கர்நாடகாவில் புதிதாக உருவாக்கப்பட்ட மின்னணு ஊடகப் பத்திரிகையாளர் சங்கம் (Electronic Media Journalists' Association), யூடியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம் என வலியுறுத்தி முதலமைச்சர் சித்தராமையாவிடம் மனு அளித்தது. இந்தச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அரசு இந்த நடவடிக்கையை பரிசீலிப்பதாகத் தெரிகிறது.

மின்னணு ஊடகப் பத்திரிகையாளர் சங்கத்தின் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, "செய்தி சேனல்களைத் தொடங்கி செய்திகளை ஒளிபரப்ப உரிமம் கட்டாயம். ஆனால், யூடியூப் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு இதுவரையில் உரிமம் தேவை இல்லை என்ற நிலை இருந்தது. தற்போது டிஜிட்டல் ஊடகங்களும் செய்தி ஒளிபரப்ப உரிமம் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும்" என்று தெரிவித்தார்.

சமூகத்திற்கு சாபக்கேடு

மேலும், "மிரட்டுவது மற்றும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு" என சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

சில யூடியூப் சேனல்கள் ஒழுங்கற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், மின்னணு ஊடகங்களுக்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என மின்னணு ஊடகப் பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கையின் அடிப்படையிலேயே அரசு இந்த நடவடிக்கையைத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், கர்நாடகத்தில் இனி யூடியூப் செய்தி சேனல்கள் அரசு அனுமதி பெற்ற பின்னரே செயல்பட முடியும்.