தெற்கு பெங்களூரு துணை ஆணையராக பணியாற்றி வரும் அண்ணாமலை ஐபிஎஸ், கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்திலுள்ள சொக்கம்ப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் குப்புசாமி. மிகச் சிறந்த விவசாயி.

கோவையிலுள்ள பிரபல கல்லூரி  ஒன்றில் அண்ணாமலை தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பின்னர் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தனது மேல்படிப்பை படித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தனக்குள் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார்தான் தனது ரோல் மாடல் என்றும் அண்ணாமலை தெரிவித்துளளார்.

இதையடுத்து ஐபிஎஸ் தேர்வு எழுதி ஜெயித்த அண்ணாமலை தற்போது தெற்கு பெங்களூரு இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் தனது பணியின்போது மிக நேர்மையாக நடந்த கொண்டதுடன், ரௌடிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி  வருகிறார். ஐபிஎஸ் அதிகாரிகளில் கம்பீரமாகவும், நேர்மையாகவும் செயல்படுபவர் என்ற பெருமை பெற்று "கர்நாடக சிங்கம் போலீஸ்" என்று  அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டுகளைப் பெற்றவர்.

இன்னும் ஒரு படி மேலே போய் கன்னடர்கள் இவருக்கு ரசிகர் மன்றம் வைத்து கொண்டாடி மகிழ்ந்து வருவது கூடுதல் சிறப்பு.

இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் .இதற்கு முக்கிய காரணம்க அவர் சொல்வது, தனது குடும்பத் தொழிலான விவசாயம் பார்க்கப் போவது தான் என அவர் தெரிவித்துளளார்.

கடந்த ஆறு மாதங்கள் நன்றாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக  தனது நண்பர்களுக்கு  எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ள அண்ணாமலை, கடந்த ஒன்பது ஆண்டுகால காவல்துறையின் பணியில், ஒவ்வொரு நொடிபொழுதையும் தனது காக்கி உடைக்கான பணியை வாழ்ந்து காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

காக்கியால் வருகின்ற பெருமையை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, போலீஸ் வேலை கடவுளுக்கு மிகவும் நெருக்கமான வேலை என்று கூறியுள்ளார். 

தனக்கு பிடித்த ஐபிஎஸ் மதுக்கார் ஷெட்டியின் இறப்பு தனது சொந்த வாழ்க்கையை சுய ஆய்வுக்குட்படுத்தி பார்க்க தூண்டியதாக அண்ணாமலை கூறியுள்ளார். இந்திய மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் பதவியை ராஜிநாமா செய்வதன் மூலம் கஷ்டங்களை வழங்கக்கூடாது என்பதாலேயே, தேர்தல்கள் முடிந்த பின்னர், இந்த முடிவை நிறைவேற்றியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

இனிமேல் தனது நேரத்தை குடும்பத்தோடு செலவிட்டு, விரைவாக வளர்ந்து வரும் மகனோடு மகிழ்ச்சியாக கழிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சொந்த ஊருக்குச் சென்று விவசாயத்தில் ஈடுபட்டு, எனது ஆடு இன்னும் எனது குரலுக்கு செவிமடுக்கிறதா என்பதை பார்க்க ஆசையோடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவின் 'சிங்கம்' என்று வர்ணிக்கப்படும் அண்ணாமலையின் ராஜிநாமா முடிவு கர்நாடக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.