கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியுள்ளார். அவர்கள் பங்கேற்காத பட்சத்தில் குமாரசாமி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. திடீரென ஆளும்கட்சி மீது அதிருப்தி கொண்ட 14 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். இதனால், மெஜாரிட்டி இழந்த கூட்டணி அரசு கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

 

இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கடிதத்தின் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்துவருவதாக எம்.எல்.ஏ.க்கள்  சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. 

அதில், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகருக்கு முழு சுந்திரம் உள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது எம்.எல்.ஏ.க்களின் சொந்த முடிவு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகையால், நாளை நடைபெறும் வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் இருக்கும் பட்சத்தில் குமாரசாமி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, முதல்வர் குமாரசாமி மற்றும் பாஜக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா ஆகியோர் சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.