கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என நாங்கள் உத்தரவிட முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. 

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. தங்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரடவிடக் கோரி முதலில் 10 எம்.எல்.ஏ.க்களும் பின்னர் 5 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் அரசியல் சாசன விவகாரம் என்பதால், விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஒருவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தனிப்பட்ட காரணங்கள் ஆயிரம் இருக்கும் என்று எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி கருத்து தெரிவிக்கையில் சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என நாங்கள் உத்தரவிட முடியாது என கூறியுள்ளார்.

 

இதனிடையே, கர்நாடகா சட்டப்பேரவையில் வரும் வியாழக்கிழமை முதல்வர் குமாராசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க சபாநயகர் உத்தரவிட்டுள்ளார்.