பேருந்தில் பயணம் செய்யும் போது, மொபைல் போன் ஸ்பீக்கரில், அதிக சத்தம் வைத்து பாட்டு, வீடியோக்கள் பார்க்க கூடாது என்றும் மீறும் பயணியை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலர் பேருந்து பயணத்தின் போது பாடல் கேட்பதை பழக்கமாக வைத்துள்ளனர். பேருந்துகளில் தூரமாக பயணிக்கும் போது பயணத்தின் அலுப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடல்களை கேட்கும் பழக்கம் சிலரிடம் உள்ளது. மேலும் சிலர் மன நிம்மதிக்காக செல்போன்களில் பாட்டு கேட்பது வழக்கம். சில பேருந்துகளிலேயே பாடல்கள் ஒலிக்கும். அந்த பாடல்களைக் கேட்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அதே நேரத்தில் இதை இடையூறாக கருதும் பயணிகளும் இருக்கின்றனர். இவர்கள் ஒருபுறம் இருக்க பேருந்துகளில் வீடியோ பார்க்கும் சிலர் அதிக சத்தத்துடன் அதனை பார்த்துக்கொண்டு வருவர். அது அருகில் அமர்ந்து இருப்பவருக்கு இடையூறாக இருக்கும். இன்னும் சிலர் பேருந்துகளில் ஏறியதுமே தூங்கிவிடுவர். பேருந்து பயணங்களில் ஜன்னல் ஓரம் உட்காரவும் தூங்குவதற்கும் என்றே சிலர் இருக்கிறார்கள். பேருந்தில் பயணம் செய்யும்போது சிலர் சத்தமாக வீடியோக்கள் பார்ப்பது, சிரிப்பது என பக்கத்தில் இருப்பவர்களை சங்கடத்தில் ஆழ்த்துவதை சகஜமாக பார்க்க முடியும். இந்த நிலையில் கர்நாடகாவில் ஒருவர் பேருந்துகளில் சத்தமாக பாட்டு கேட்க தடை விதித்துக்கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுபோன்ற தொந்தரவுக்கு ஆளான நபர் ஒருவர் பேருந்தில் பயணிக்கும் போது, சத்தமாக பாட்டுக் கேட்கவும், வீடியோ பார்க்கவும் தடை விதிக்கக் கோரி, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள், பேருந்தில் பயணம் செய்யும் போது, மொபைல் போன் ஸ்பீக்கரில், அதிக சத்தம் வைத்து பாட்டு, வீடியோக்கள் பார்ப்பவர்களை, சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என பேருந்து நடத்துனர், ஓட்டுனர் அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த அறிவுறுத்தலை மீறும் பயணியை பேருந்து ஊழியர்கள் தாராளமாக பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். மேலும் அந்த பயணிக்கு பேருந்து கட்டணத்தை திரும்ப கொடுக்கவும் தேவையில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த சட்டம் மோட்டார் வாகன விதிமுறைகள் – 1989 ன் படி விதி – 94 (1) (5) ன் படி ஓட்டுநர், நடத்துனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகா மோட்டார் வாகன விதிமுறைகள், 1989ன்படி விதி 94(1)(5)-ன்படி கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் தங்கள் செல்போனில் சத்தமாக பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது மற்ற பயணிகளுக்கும், ஓட்டுநர், நடத்துநருக்கும் இடையூறு ஏற்படுகிறது. அதோடு ஒலிமாசும் ஏற்படுகிறது. அதனால் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் செல்போனில் பாடல் கேட்கவும், திரைப்படங்கள் பார்க்கவும் உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. முதல் முறை இதுகுறித்து பயணிகளுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தல் வழங்க வேண்டும். அதை மீறியும் தொடர்ந்து பாடல் கேட்டால் பேருந்தில் இருந்து குறிப்பிட்ட பயணியை இறக்கி விட நடத்துநருக்கு சட்டப்படி அதிகாரம் அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பயணிகளுக்கு பயணச்சீட்டு கட்டணத்தை திருப்பி அளிக்க தேவையில்லை. இந்த விதியை உடனடியாக அமல்படுத்தி, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு புதிய விதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.