இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர்ச்சியாக 5 நாட்களாக தினமும் 6000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

மார்ச் 25லிருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கில் நிறைய தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. 

ஆனால் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றிற்கான தடை நீடிக்கிறது. கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால், தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதேவேளையில், கொரோனாவுடன் வாழ பழக வேண்டும் என்ற அறிவுறுத்தல் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. மக்களும் முகக்கவசங்களுடனும், தனிமனித இடைவெளியை பின்பற்றியும் வருகின்றனர். 

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோவில்கள் திறக்கப்படவில்லை. மதம் சார்ந்த கூட்டங்கள், கூட்டுவழிபாடுகள் ஆகியவற்றிற்கு தடை நீடிக்கிறது. ஊரடங்கு காலத்தில் நடக்கவிருந்த திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டன.  நான்காம் கட்ட பொதுமுடக்கம், வரும் 31ம் தேதி முடிவடையவுள்ளது. 

இந்நிலையில், கர்நாடகாவில் வரும் ஜூன் ஒன்றாம் முதல் கோவில்களை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ், கர்நாடகாவில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் கோவில்களை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கோவில்களில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார். 

கர்நாடகாவில் இதுவரை 2282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில், கர்நாடகாவில் பாதிப்பு மிகக்குறைவு.