இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 1695 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவை தடுக்க மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஊரடங்கால் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்துவரும் மக்களின் கஷ்டத்தை போக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளின் மூலம் இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுவருகிறது. 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ரூ.1610 கோடி நிவாரண நிதி திட்டத்தை அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அதன்படி, முடி திருத்துபவர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 700ஐ நெருங்குகிறது.

மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு கர்நாடகாவில் குறைவுதான். கர்நாடகாவில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும் 12 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் உள்ளன. 

இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவின் 2,30,000 முடித்திருத்துபவர்கள் மற்றும் 7,75,000 ஓட்டுநர்களுக்கு ஒருமுறை இழப்பீடாக ரூ.5000 வழங்கப்படும் என எடியூரப்பா அறிவித்துள்ளார்.