கர்நாடகாவில், 500 ரூபாய் கடனுக்காக தமது மனைவியை தமது நண்பன் திருமணம் செய்து அழைத்துச் சென்று விட்டதாக ஒருவர் காவல் இணை ஆணையர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார். முரக்கிபாவி என்ற கிராமத்தைச் சேர்ந்த பசவராஜ்-உம், முடக்கனட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சாஹாப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் சப்ளையராக பணிபுரிந்து வருகின்றனர். அதே உணவகத்தில் பார்வதி என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். இவர் பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரிடமும் பழகி வந்துள்ளார். 

இந்த நிலையில் பார்வதியும் பசவராஜூம் 2011ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. நன்றாக சென்று கொண்டிருந்த பசவராஜின் வாழ்க்கையில் கடன் ரூபத்தில் விதி விளையாடியது. ரமேஷிடம் இவர் வாங்கிய 500 ரூபாய் கடன் காதல் மனைவியை இவரிடம் இருந்து பிரிக்க காரணமாகிவிட்டது. 

இரண்டு மாதங்களுக்கு முன் ரமேஷிடம் பசவராஜ் 500 ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதை கூறிய படி பசவராஜ் திருப்பிக் கொடுக்காததால் அவரது மனைவி பார்வதியை ரமேஷ் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது தமது மனைவியை மீட்டுக் கொடுக்குமாறு பெலாகவி காவல் இணை ஆணையர் அலுவலகம் முன் பசவராஜ் தர்ணாவில் ஈடுபட்டார்.

 

 அப்போது பேசிய அவர் இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்ததாகவும் ஆனால் காவல்துறையினர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் மனம் வருந்திக் கூறினார். தற்போது தமது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னுடன் வர மறுப்பதாகவும் பசவராஜ் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனைவியை மீட்டுக் கொடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக காவல் ஆணையரிடம் இவர் புகார் வைத்தபோது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.