கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வராவுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் வீடுகளில், சமீபத்தில் மிகப்பெரிய சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். 

இந்நிலையில், கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர கங்காதரையா என அழைக்கப்படும் ஜி.பரமேஸ்வராவின் இல்லம் மற்றும் கல்லூரிகளில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  முன்னாள் துணை முதல்வராக இருந்த ஜி.கே.பரமேஸ்வர், இவர் பதவியில் இருந்த போது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பல கல்லூரிகளுக்கு சலுகைகள் வழங்கியதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இதன் அடிப்படையில், அவருடைய உறவினர்கள் வீடுகளிலும், கல்லூரிகளிலும் இந்த அதிரடி சோதனையானது நடைபெற்று வருகிறது. இதனிடையே மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.எல்.ஜாலப்பா அவர்களின் தும்கூருவில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட 13 இடங்களில் சோதனையானது நடைபெறுகிறது. இந்த சோதனையின் போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

2 தலைவர்களுடைய உறவினர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர், இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை சோதனை குறித்துப் பேசியுள்ள பரமேஸ்வரா, சோதனை பற்றி எந்தத் தகவலும் வரவில்லை. அதனால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் தரப்பிலிருந்து ஏதேனும் தவறு இருந்தால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார். 

இதனிடையே, கர்நாடகாவில் எடியூரப்பா அரசு அமைந்த பிறகு, இன்று குளிர்கால சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் சோதனை நடத்தப்பட்டுவருவது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.