கர்நாடக சபாநாயகருக்கு எதிராக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என  உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றனர். இதனால் கர்நாடக அரசுக்கு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஆனால், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. தங்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரடவிடக் கோரி முதலில் 10 எம்.எல்.ஏ.க்களும் பின்னர் 5 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசியல் சாசன விவகாரம் என்பதால், விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என நாங்கள் உத்தரவிட முடியாது என கருத்து தெரிவித்திருந்தனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் உடனே முடிவு எடுக்க வேண்டும் வாதிட்டனர். ஆனால், சபாநாயகர் தரப்பில் ராஜினாமா கடிதத்தை நேரில் சந்தித்து கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். 

மேலும், சபாநாயகர் முடிவு சட்டத்திற்கு புறம்பானதாக இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என குமாராமி தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இதனால், கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.