கர்நாடகா காங்கிரஸ் செயல் தலைவர் ஆர். துருவநாராயண் மாரடைப்பால் இன்று காலமானார். 

மைசூரில் இருக்கும் தனது வீட்டில் நெஞ்சு வலி இருப்பதாக துருவநாராயண் தெரிவித்துள்ளார். உடனடியாக இவரை காரில் அமர வைத்து ஓட்டுநர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டிஆர்எம்எஸ் மருத்துவமனை டாக்டர் மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.

இவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், ''முன்னாள் எம்.பி., ஆர்.துருவநாராயணனின் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. கடின உழைப்பாளி மற்றும் தாழ்மையான அடிமட்டத் தலைவர். அவர் என்எஸ்யுஐ மற்றும் இளைஞர் காங்கிரஸில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

"மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யும், கேபிசிசி செயல் தலைவருமான துருவ நாராயண் மாரடைப்பால் காலமானார். இது காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. மறைந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் இந்த துக்கத்தைத் தாங்கக் கூடிய வலிமையை பெற வேண்டும்” என்று கர்நாடக காங்கிரஸ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவும் அக்கட்சித் தலைவரின் அகால மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பதிவில், ''கர்நாடக தலைவரும், முன்னாள் எம்.பி.யும், எனது அன்பு நண்பருமான ஆர். துருவநாராயணனின் துரதிர்ஷ்டவசமான மற்றும் அகால மறைவால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

மேலும், காங்கிரஸ் தலைவர்கள் டிகே சிவகுமார், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.